அடையாளம் கேட்டுச் சோதித்தல்
(மாற் 8:11-13; லூக் 12:54-56)
1 பரிசேயரும் சதுசேயரும் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் அவரிடம் வந்து
வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைத் தங்களுக்குக் காட்டும்படி கேட்டனர். [1]
2 அவர் அவர்களிடம் மறுமொழியாக,
["மாலை வேளையாகும்போது வானம் சிவந்திருந்தால்
'வானிலை நன்றாக இருக்கிறது' என நீங்கள் சொல்வீர்கள்.
3 காலை வேளையில், வானம் சிவந்து மந்தாரமாயிருந்தால்,
'இன்று காற்றுடன் கூடிய மழை இருக்கும்' என்பீர்கள்.
வானத்தின் தோற்றத்தைப் பகுத்துணர நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
ஆனால் காலத்தின் அறிகுறிகளை அறிய உங்களால் முடியாதா?"
] [2]
4 "இந்தத் தீய, விபசாரத் தலைமுறையினர் அடையாளம் ஒன்று கேட்கின்றனர்.
இவர்களுக்கு யோனாவின் அடையாளமேயன்றி வேறு
எந்த அடையாளமும் கொடுக்கப்படமாட்டாது" என்றார்.
பின் அவர் அவர்களை விட்டு விலகிப் போய்விட்டார்.
பரிசேயர், சதுசேயரின் புளிப்புமாவு
(மாற் 8:14-21)
5 சீடர்கள் மறு கரைக்குச் சென்ற போது
அப்பங்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார்கள்.
6 இயேசு அவர்களிடம்
"பரிசேயர், சதுசேயரின் புளிப்பு மாவைக்குறித்துக்
கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இருங்கள்"
என்றார். [3]
7 "நாம் அப்பங்களை எடுத்து வராததால்தான் அவர் இப்படிச் சொன்னார்" எனத்
தங்களிடையே அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
8 இதை அறிந்த இயேசு,
"நம்பிக்கை குன்றியவர்களே, அப்பமில்லை என்று
உங்களிடையே ஏன் பேசிக் கொள்கிறீர்கள்?
9 உங்களுக்கு இன்னுமா புரியவில்லை?
நான் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்த
ஐந்து அப்பங்களைப் பற்றி நினைவில்லையா?
அப்போது எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்?
[4]
10 அல்லது நாலாயிரம் பேருக்கு நான் பகிர்ந்தளித்த
ஏழு அப்பங்களைப்பற்றி நினைவில்லையா?
அப்போது எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்?
[5]
11 நான் உங்களிடம் கூறியது அப்பங்களைப் பற்றியல்ல என்பதை
நீங்கள் புரிந்துகொள்ளாதது எப்படி?
பரிசேயர், சதுசேயர் ஆகியோரின் புளிப்பு மாவைப்பற்றி
எச்சரிக்கையாய் இருங்கள்" என்றார்.
12 அப்பொழுதுதான் அப்பத்திற்கான புளிப்பு மாவைப் பற்றி அவர் சொல்லவில்லை;
மாறாகப் பரிசேயர், சதுசேயர் ஆகியோரின் போதனையைப்பற்றி
எச்சரிக்கையாய் இருக்கவே அவர் சொன்னார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை
(மாற் 8:27-30; லூக் 9:18-21)
13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார்.
அவர் தம் சீடரை நோக்கி,
"மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?"
என்று கேட்டார்.
14 அதற்கு அவர்கள்,
"சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர்
எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்" என்றார்கள். [6]
15 "ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?"
என்று அவர் கேட்டார்.
16 சீமோன் பேதுரு மறுமொழியாக,
"நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார்.
அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.
[7]
17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை;
மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.
18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்:
உன் பெயர் பேதுரு;
[8] இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.
பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.
19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.
மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்.
மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்.
[9]
20 பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று
இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.
இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்
(மாற் 8:31-9:1; லூக் 9:22-27)
21 இயேசு தாம் எருசலேமுக்குப் போய்
மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால்
பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும்
மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத்
தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.
22 பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு,
"ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்றார்.
23 ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து,
"என் கண்முன் நில்லாதே சாத்தானே,
நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்;
ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல்
மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்"
என்றார்.
24 பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து,
"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து
தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.
25 ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர்.
மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்.
[10]
26 மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும்
தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?
அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?
27 மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு
தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்;
அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.
[11]
28 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்;
இங்கே இருப்பவருள் சிலர் மானிடமகனது ஆட்சி வருவதைக்
காண்பதற்கு முன் சாகமாட்டார்"
என்றார்.- குறிப்புகள்
[1] 16:1 - மத் 12:36; லூக் 11:16; யோவா 6:30,31.
[2] 16:2-3 - அடைப்புக் குறிக்குள் உள்ள பகுதி பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.
[3] 16:6 - லூக் 12:1.
[4] 16:9 - மத் 14:17-21.
[5] 16:10 - மத் 15:34-38.
[6] 16:14 - மத் 14:1,2; மாற் 6:14,15; லூக் 9:7-8.
[7] 16:16 - யோவா 6:68,69.
[8] 16:18 - "பேதுரு" என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் "பாறை" என்பது பொருள்.
[9] 16:19 - மத் 18:18; யோவா 20:23.
[10] 16:24,25 - மத் 10:38; லூக் 14:27; 17:33; யோவா 12:25,26.
[11] 16:27 - யோபு 14:11; திபா 62:12; மத் 25:31; உரோ 2:6.